எலான் மஸ்க்கிற்கு சொந்தமாக வீடுகூட இல்லையா? பரபரப்பைக் கிளப்பும் புதுத் தகவல்!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் தனக்குச் சொந்தமாக வீடுகூட இல்லை என நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி எலான் மஸ்க்கிற்கு தற்போது 269.5 பில்லியன் டாலர்சொத்து இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவர் மின்சார கார் உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் கொடிக்கட்டி பறந்துவருகிறார். இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை 43 பில்லியன் டாலர் தொகைக்கு வாங்கியுள்ள இவர் அதன் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் வாங்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இப்படி விண்வெளி ஆராய்ச்சி, மின்சாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்து உலகின் முதல் பணக்காரராக வலம்வரும் எலான் மஸ்க் தனக்கு இப்போது சொந்தமாக வீடு இல்லை என்றும் நண்பர்களின் உதிரி படுக்கையறைகளில் தூங்குவதாகவும் கூறியுள்ளார். இந்தத் தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

மேலும் தனக்கு படகு இல்லை எனக்கூறிய எலான் மஸ்க் தான் விடுமுறை எடுப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பணக்காரர்கள், ஏழை என்று பெரிய ஏற்றத்தாழ்வு இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தனக்குத் தனிப்பட்ட நுகர்வு அதிகமாக இல்லை. விதிவிலக்காக விமானம் வைத்திருக்கிறேன். நான் விமானத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் எனக்கு வேலை செய்வதற்கு குறைவான மணிநேரம் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பே பல நேர்காணல்களில் வீடு குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த எலான் மஸ்க், நான் தனியாக வீடு எனும் கட்டிடத்தில் தங்குவதில்லை. ஸ்பேஸ் எஸ்க் நிறுவனத்திற்கு அருகில் இருக்கும் சொந்த வீட்டையும் 50 ஆயிரம் டாலர்களுக்கு வாடகைக்கு விட்டுவிட்டேன். இதனால் பெரும்பாலும் நிறுவனங்களில் இருக்கும் விருந்தினர் அறைகளையே பயன்படுத்தி வருகிறேன். அதோடு எனது ஊழியர்களின் குடியிருப்புகளில் உள்ள உதிரி அறைகளைப் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.