இந்தியாவில் டெஸ்லா கார்கள்… ஒப்புதல் பெறப்பட்டதாகப் பரபரப்பு தகவல்!
- IndiaGlitz, [Wednesday,September 01 2021]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை அடுத்து பொதுமக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் உலகிலேயே அதிகக் கவனம் ஈர்த்துவரும் டெஸ்லா வகையின் 4 புது வேரியண்ட் கார்களுக்கு இந்தியாவில் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாக வாகனச் சேவா தகவல் வெளியிட்டு உள்ளது.
சமீபத்தில் டெஸ்லா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா? எனும் கேள்வியை யூடியூப் சேனல் நடத்திவரும் மதன் கௌரி கேட்டிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதிலளித்த டெஸ்லா நிறுவனத்தின் செயல்தலைவர் எலான் மஸ்க் இந்தியாவில் வாகன ஒப்புதல் பெறுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி இருந்தார்.
ஆனால் தற்போது இந்தியாவில் டெஸ்லா வகை 4 புது வேரியண்ட்களுக்கு ஹோமோலெஷன் எனப்படும் வாகன விதிமுறை ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த கார்களின் மாடல்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை. அமெரிக்காவில் ஏற்கனவே டெஸ்லா நிறுவனம் தயாரித்த தானியங்கி மற்றும் மின்சார கார்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் டெஸ்லா நிறுவனம் கார்களை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்நிலையில் டெஸ்லாவின் 3, மற்றும் Y வகை கார்கள் இந்தியச் சாலைகளில் சோதனை ஓட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.