டுவிட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே எலான் மஸ்க் செய்த அதிரடி: வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிர்வாகிகள்!
- IndiaGlitz, [Friday,October 28 2022]
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய நிலையில், டுவிட்டரை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி பணக்காரரான டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டரை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலையில் அதிகாரபூர்வமாக ட்விட்டர் தற்போது எலான் கைக்கு வந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஒரு சில நிமிடங்களில் அவர் செய்த முதல் வேலை டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோர்களையும் பணி நீக்கம் செய்துள்ளார், இருப்பினும் இந்த தகவலை ட்விட்டர் நிறுவனமோ அல்லது எலான் மஸ்க் தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் குறிப்பிடுகையில், டுவிட்டரை தான் வாங்கியது பொது நல நோக்கத்திற்காக என்றும் எல்லோருடைய கருத்துக்களையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக இருக்கிறது என்றும் ட்விட்டர் நிறுவனத்தை நான் வாங்கியது வருமானத்திற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு மூன்று முக்கிய மாற்றங்களை கொண்டு வரப்போவதாக கருதப்படுகிறது. குறிப்பாக உண்மைக்குப் புறம்பான தகவல், ஆதாரமற்ற தகவல்கள் உள்ள டுவிட்டுக்களை அம்பலப்படுத்தி, பொய்யான தகவல்களை வெளியிடும் டுவிட்டர் கணக்குகளை முடக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக தெரிகிறது.
மேலும் பயனர்களுக்கு பயனுள்ள தகவல்களை முன்னிலைப்படுத்தி காண்பிப்பது மற்றும் வெளிப்படைத் தன்மையை கொண்டுவருவது ஆகியவற்றை அமல்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார். அதேபோல் போலி கணக்குகளை நீக்குவதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.