டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய எலான் மஸ்க்… விலை எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,April 26 2022]
உலகின் மூத்த பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் டிவிட்டர் நிறுவனம் இனி பப்ளிக் நிறுவனாக இல்லாமல் தனியார் நிறுவனமாகச் செயல்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டிவிட்டர் நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். அதிலும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் வெளியேறியதில் இருந்து டிவிட்டர் நிறுவனத்திற்கும் எலான் மஸ்க்கிற்குமான மோதல் அதிகரித்துக் காணப்பட்டது. இவரைத் தவிர உலகம் முழுவதும் டிவிட்டர் நிறுவனம் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும் பல நாடுகளில் இந்த நிறுவனம் அரசாங்கத்திற்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கணக்கு அடிக்கடி முடக்கப்பட்டு வருவது குறித்து கடுமையாகச் விமர்சித்து இருந்தார். இதற்காக அவரே தனி சமூகவலைத்தள செயலி ஒன்றை துவக்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற நினைத்த எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் 9.2% பங்குகளை விலைக்கு வாங்கினார். இதனால் அந்நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராக உள்நுழைந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை மாற்ற முடியும் என்றும் நம்பினார். ஆனால் இதுநடக்காமல் போகவே ஒட்டுமொத்தமாக டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்குவது என முடிவெடுத்த எலான் கடந்த சில வாரங்களாக இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 டாலர் (இந்திய மதிப்பில் 4120 ரூபாய்) என்கிற ரீதியில் அதன் 100% பங்குகளை 37 பில்லியன் டாலர்களுக்கு விலை பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்தமாக டிவிட்டர் நிறுவனத்திற்கு எலான் 44 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடியை) செலுத்தவுள்ளதாகவும் அதற்கு போர்ட் உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகில் மிகப்பெரிய சமூகவலைத்தளமாகச் செயல்பட்டுவரும் டிவிட்டர் நிறுவனம் இதுவரை பப்ளிக் நிறுவனமாக இயங்கிவந்தது. தற்போது எலான் அதை விலைக்கு வாங்கியதால் தனியார் நிறுவனமாக மாறப்போவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிவிட்டரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஊழியர்களிடம் நேற்று பேசியுள்ளார். அதில் ஒப்பந்தம் முடிந்தது தளம் எந்தத் திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
????♥️ Yesss!!! ♥️???? pic.twitter.com/0T9HzUHuh6
— Elon Musk (@elonmusk) April 25, 2022