தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கமல் சந்திப்பு! தமிழக அரசியலில் பரபரப்பு
- IndiaGlitz, [Thursday,June 20 2019]
குஜராத்தில் நரேந்திரமோடி, ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர்களை தனது அபாரமான வியூகங்கள் மூலம் முதல்வராக்கியவர் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். இவரை சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதேபோல் அதிமுகவும் இவரை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர் சற்றுமுன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து கமல்ஹாசனை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், கூட்டணி இன்றி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் கெளரவமான ஓட்டு சதவிகிதங்களை பெற்றார். இதனையடுத்து அடுத்த கட்டமாக உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்க, அவர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து வியூகம் எடுக்க முடிவு செய்துள்ளதாக இந்த சந்திப்பு உணர்த்துகிறது
தமிழகத்தில் இருந்து ஏற்கனவே அதிமுக பிரசாந்த் கிஷோரை தொடர்பு கொண்டிருந்தபோதும் அவர் அதிமுகவுக்கு வேலை செய்வதாக இன்னும் உறுதியளிக்கவில்லை. இந்த நிலையில் கமல்ஹாசனை பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளதால் அவரது கட்சிக்கு வியூகம் அமைத்து கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மோடி, ஜெகன்மோகன் ரெட்டியை போல் கமல்ஹாசனையும் பிரசாந்த் கிஷோர் முதல்வராக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்