225 முறையும் தோல்வி... இதையே சாதனையாக்கத் துடிக்கும் நபர் பற்றி தெரியுமா?
- IndiaGlitz, [Friday,December 24 2021]
இந்தியத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் வாதிகள் பலரும் மக்கள் தொண்டு மற்றும் பொது வாழ்க்கையை மையமாக வைத்துக் கொண்டு களமிறங்குகின்றனர். இதில் வெற்றிப்பெற்றால் மகிழ்ச்சி. ஆனால் தோல்வியைத் தழுவும்போது அளவுக்கடந்த வருத்தம் மற்றும் ஏமாற்றம் அடைவதைப் பார்த்திருப்போம்.
ஆனால் தோல்வியைத் தழுவப்போகிறோம் எனத் தெரிந்தே போட்டியிடும் ஒரு வேட்பாளர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறார்களா? அவர் நம்முடைய தமிழகத்தில்தான் இருக்கிறார். அதுவும் ஒருமுறை இருமுறை தோல்வியல்ல. இதுவரை 225 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய படையெடுப்பை மட்டும் அவர் ஒருபோதும் நிறுத்திக்கொள்ள முன்வரவில்லை என்பதுதான் இங்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
கூட்டுறவு தேர்தல் முதற்கொண்டு உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், மாநிலங்களைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் வரை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் இதுவரை 225 முறை போட்டியிட்டு உள்ளார். இதனால் அதிகமுறை போட்டியிட்டவர் என்ற அடிப்படையில் லிம்கா சாதனை விருதைப் பெற்றுள்ளார். மேலும் இந்தியன் புக் ஆஃப் சாதனையாளர் புத்தகத்திலும் அவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கே.பத்மராஜன். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார். மேலும் ஒரே தேர்தலில் பல இடங்களில் போட்டியிடுவதையும் பழக்கமாக்கி வைத்திருந்தார். அந்த வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 5 இடங்களிலும் சட்டப்பேரவை தேர்தலில் 3 இடங்களில் இவர் போட்டியிட்டதால் இந்தியத் தேர்தல் ஆணையமே ஒரு முக்கிய முடிவை எடுக்கவேண்டி வந்தது.
அதாவது ஒருநபர் தேர்தலில் 2 இடங்களுக்கு மேற்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது என இந்தியத் தேர்தல் ஆணையமே சட்டம் வகுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர பத்மராஜன் முக்கியத் தலைவர்களை எதிர்த்து போட்டியிட்டு தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் செய்தார்.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை எதிர்த்து லக்னோவிலும், நரசிம்மாவை நந்தியல் தொகுதியிலும் மோடியை வதோராவிலும் எதிர்த்து அவர் போட்டியிட்டள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர், கே.கே.நகர், ஆண்டிப்பட்டி போன்ற தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளார். மறைந்த தலைவர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம் தொகுதியிலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டு உள்ளார்.
இதைத்தவிர தேமுதிக தலைவர் விஜய்காந்தை எதிர்த்து உளுந்தூர்பேட்டை தொகுதி மற்றும் மன்மோகன்சிங்கை எதிர்த்து மாநிலங்களை தேர்தலுக்காக அசாம் பகுதியில் அவர் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி பல இடங்களில் முக்கியத் தலைவர்களை எதிர்த்து போட்டியிட்ட இவர் நரசிம்மாவை எதிர்த்து நந்தியல் தொகுதி வேட்புமனு தாக்கல் செய்தபோது சில மர்மநபர்கள் இவரைக் கடத்திச்சென்றது ஊடகங்களில் பேசுபொருளானது. இதனால் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் தலைப்பு செய்திகளிலும் வந்துவிடும் அளவிற்கு இவருடைய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் தனது 3 வகை மகன் ஸ்ரீஜேஸை வேட்பாளராக்கி தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்திய அவலமும் அரங்கேறி இருக்கிறது.
சமீபத்தில் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் 11 ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் வேட்பு இவர்மனுதாக்கல் செய்தார். இதனால் வெற்றிக்கரமாக 225 வேட்புமனுவை அவர் தாக்கல் செய்திருக்கிறார். இதுகுறித்து பேசிய பத்மராஜன் தோல்வி தொடர்ந்தாலும் பரவாயில்லை. அதைக் கடந்து சென்று ஒரு புது சாதனைப் படைக்க வேண்டும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வரை ஓயமாட்டேன் எனக் கூறியுள்ள இவர் மக்கள் மத்தியில் தேர்தல் மன்னன் எனப் பெயர் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.