இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,March 17 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒன்றுபட்டு இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஒருசில மாதங்களில் அதிமுக, சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது.
சசிகலா அணியில் 122 எம்.எல்.ஏக்களும், ஓபிஎஸ் அணியில் 12 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். மேலும் அதிமுகவின் நிர்வாகிகள் இரு அணிகளிலும் உள்ளனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கொண்டாடி தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளன.
இந்த மனுவிற்கு இருதரப்பில் இருந்தும் விளக்கம் பெற்ற தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற முடிவை வரும் 22ஆம் அறிவிக்கவுள்ளது. அன்றைய நாளில் இரு அணிகளின் நிர்வாகிகளும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எனவே இன்னும் 4 நாட்களில் இரட்டை இலை சின்னம் சசிகலா அணிக்கா? ஓபிஎஸ் அணிக்கா? அல்லது முடக்கப்படுமா? என்பது தெரிந்துவிடும்.