'சர்கார்' படம் தந்த விழிப்புணர்வு: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு
- IndiaGlitz, [Thursday,March 07 2019]
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவான '49P' என்ற பிரிவு இருப்பதே பலருக்கு தெரிய வந்தது. இந்த பிரிவின்படி நமது ஓட்டை கள்ள ஓட்டாக யாராவது போட்டுவிட்டாலும், அடையாள அட்டையை காண்பித்து நமது வாக்கை பதிவு செய்யலாம் என்று கூறுகிறது.
இந்த நிலையில் '49P' குறித்து வாக்காளர்களை விழிப்புணர்வு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வருகிறது. அந்த விளம்பரத்தில் உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். சட்டப்பிரிவு 49P மூலமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்கு சீட்டின் மூலம் வாக்களிக்கலாம். கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஒய்வு ஊதிய ஆவணம், MP, MLA, MLC அலுவலக அட்டை, மத்திய மாநில அரசு அடையாள அட்டை, MGNREGA அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை, NPR SMART CARD முதலிய ஆவணங்களில் ஏதேனுமொன்றை பயன்படுத்தி உண்மையான வாக்காளர் நீங்கள் என நிரூபணம் செய்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் ஒரு திரைப்படம் ஒரு நாட்டின் தேர்தல் ஆணையத்தையே விழிப்புணர்வு செய்ய வைத்துள்ளது என்பது அவரது ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதப்படுகிறது.