அடுத்த தேர்தலில் உடல்நலக்குறைவு உள்ள பிரபலங்கள் போட்டியிட முடியுமா
- IndiaGlitz, [Friday,December 02 2016]
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் எம்.எல்.ஏ.ஆக பதவியேற்கும் முன்பே உடல்நலக்கோளாறு காரணமாக காலமானார். இந்த தொகுதியில் சமீபத்தில்தான் இடைத்தேர்தல் நடந்தது. கடந்த ஆறு மாதங்களாக இந்த தொகுதி எம்.எல்.ஏ இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் இதுபோன்ற பிரச்சனை எதிர்காலத்தில் ஏற்படாவண்ணம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடல் ஆரோக்கிய சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொள்ளாச்சியை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடும் நபர்களும் ஏன் உடல் தகுதி சான்றிதழை வேட்புமனுவுடன் இணைக்க கூடாது' என்று நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியதோடு இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் வேட்பாளர்களின் உடல் ஆரோக்கியத்தை வேட்புமனுவுடன் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. தற்போது உடல்நலகுறைவு காரணமாக ஒருசில அரசியல் பிரபலங்கள் சிகிச்சை பெற்று வரும் அடுத்த தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு சிக்கல் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.