பிரதமரை சந்திக்கின்றார் ரஜினி. பாஜகவுக்கு ஆதரவா?
- IndiaGlitz, [Friday,March 18 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பாரதிய ஜனதா கட்சி கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறது. பிரதமரே ரஜினியின் வீட்டுக்கு நேரடியாக வந்தும் கூட ரஜினி தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றார். இந்நிலையில் தற்போது '2.0' படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லியில் இருக்கும் ரஜினிகாந்த், விரைவில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி ஆகிய இருவரையும் சந்திக்க ரஜினியின் அலுவலகத்தில் இருந்து இமெயில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான பதில் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் ரஜினிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வழங்கும் விழா மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 12 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறவிருப்பதாகவும், ரஜினிகாந்த் தற்போது டெல்லியில் இருப்பதால் முதல்கட்ட விழாவில் ரஜினியின் பெயரை இணைக்க மத்திய உள்துறையை, பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் ரஜினிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி மற்றும் அத்வானி சந்திப்பின்போது ரஜினி தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.