நிவாரண நிதி ரூ.2,000 வாங்க மறுத்து… மூதாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Tuesday,May 18 2021]
தமிழகத்தில் கொரோனா அதிகரித்ததால் கடந்த மே 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. அதன் முதல் தவணையை இந்த மாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
புதிய தமிழக அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் நிவாரண நிதி ரூ.4,000 வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அந்தத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனியைச் சேர்ந்த ஒரு மூதாட்டி தமிழக அரசு வழங்கிய ரூ.2,000 ஐ எனக்கு வேண்டாம் என மறுத்தத்தோடு மீண்டும் அந்தப் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு திருப்பி அனுப்பிய சம்பவம் பலரது மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த சுக்காங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இரத்தினம்மாள். இவர் வயதான காலத்தில் தமிழக அரசு கொடுத்த ரூ. 2,000 நிவாரணத் தொகையை மறுத்து இருக்கிறார். மேலும் அந்தப் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். அதோடு முதலமைச்சர் ஐயா அவர்கள் கொரோனா நேரத்தில் பல உயிர்களை காப்பாற்றி வருகிறார். அதனால் அவருக்கு உதவி செய்யும் வகையில் எனக்கு கிடைத்த இரண்டாயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன் என மூதாட்டி கூறியது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக தமிழக மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைச் சரிசெய்ய பொதுமக்கள் நன்கொடை வழங்க முன்வர வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதையடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை வாரிக்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏழை மூதாட்டி தனக்கு கிடைத்த நிவாரணப் பணத்தை தமிழக அரசுக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.