பழங்கால சின்னங்களை அவமதிப்பதா??? பிரபல மாடல் அழகி கைது!!!
- IndiaGlitz, [Thursday,December 03 2020]
கி.மு. 27 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு எகிப்து பிரமீட்டிற்கு அருகில் இருந்து அந்நாட்டின் மாடல் அழகி ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்த போட்டோ ஷூட் விவாகரம் அந்நாட்டில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக மாடல் அழகியும் அவரது போட்டோ கிராஃபரும் கடந்த திங்கள் கிழமை அன்று கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் வரலாற்று சின்னங்களை அவமரியாதை செய்த குற்றத்திற்காகவும் அனுமதி பெறாத குற்றத்திற்காகவும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அதோடு இந்த போட்டோ ஷூட்டிங்கால் சட்டத்திற்கும் விதிமீறலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது போன்ற விவாதங்கள் தற்போது அந்நாட்டின் தொலைக்காட்சிகளில் சூடு பிடிக்கவும் தொடங்கி விட்டது. எகிப்து நாட்டின் கிசா நகருக்கு அருகே சக்காரா எனும் பகுதியில் பழமையான தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காலம் கி.மு.27 எனவும் வரலாற்று அறிஞர்கள் கணித்து உள்ளனர்.
இந்த வரலாற்று பெருமை வாய்ந்த இடத்தில் அந்நாட்டின் மாடல் அழகியான சல்மா எல்-ஷிமி (26) என்பவர் பழங்கால எகிப்திய உடை எனும் பொருளில் ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி இருக்கிறார். அதற்கு 22 வயதே ஆன ஹோகம் முகம்மது என்பவர் போட்டோ கிராபராக செயல்பட்டு இருக்கிறார். வரலாற்று பெருமை வாய்ந்த சக்காரா பகுதியில் போட்டோ ஷூட் நடத்துவதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும் கூறப்படுகிறது.
அனுமதி பெறாமல் தொல்பொருள் சின்னங்களுக்கு மத்தியில் ஒரு மாடல் அழகி எப்படி போட்டோ எடுக்கலாம் என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாகவும் இருந்து வருகிறது. இதற்கு உடந்தையாக இருந்த தொல்பொருள் அமைச்சகத்தின் 2 அதிகாரிகள் உட்பட 4 பாதுகாவலர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரங்களுக்கு மத்தியில் எகிப்தின் பாரம்பரிய உடையில் ஜொலிக்கும் அந்த மாடல் அழகியின் புகைப்படம் தற்போது இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.