5,000 ஆண்டு பழமையான மது ஆலை? அசந்துபோன ஆய்வாளர்கள்!
- IndiaGlitz, [Monday,February 15 2021]
பழமைக்கும் விசித்திரத்துக்கும் பெயர்போன எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மது என்ற திராவகத்தை மனிதன் ஏதோ கடந்த சில நூறு ஆண்டுகளாக அருந்தி வருகிறான் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மனிதன் என்றைக்கு நாகரிகத்தை உணர ஆரம்பித்தானோ அன்றில் இருந்தே மதுவின் தொடக்கமும் ஆரம்பித்து விட்டது என்பதற்கான சான்று தற்போது அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
எகிப்தின் தெற்கு பகுதியில் உள்ள Abydos எனும் இடத்தில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான மது ஆலை ஒன்று இயங்கி வந்ததை தற்போது அகழாய்வின் மூலம் அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இது Narmar எனும் மன்னனின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. மேல், கீழ் எனப் பிரிந்து கிடந்த எகிப்தை இந்த Narmar மன்னன்தான் ஒன்றிணைத்தார் என்றும் இந்த மன்னனின் ஆட்சிக் காலத்திலேயே மது பரவலாக இருந்தது என்றும் தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இரண்டு வரிசைகளாக இயங்கி வந்த இந்த மது ஆலையில் கிட்டத்தட்ட 40 மண் பானைகளில் வைத்து மதுவை காய்ச்சி இருப்பதாற்கான அடையாளத்தையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இந்த ஆலையில் கிட்டத்தட்ட 22 ஆயிரத்து 400 லிட்டர் பீர் தயாரித்து இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மது ஆலை ஒரு கல்லரைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டு இருப்பதால் இறப்புச் சடங்கின்போது மது அதிகமாக புழங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.