எகிப்து சுடுகாட்டில் 2,500 ஆண்டு பழமையான ஈமப்பெட்டிகள்? நூற்றாண்டுகளை கடந்து வாழும் நாகரிகம்!!!
- IndiaGlitz, [Monday,September 21 2020]
எகிப்து தலைநகர் கெய்ரோவில் 2,500 ஆண்டு பழமையான ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த பேழைகளுடன் கலைநயம் பொருந்திய வேறு சில பொருட்களையும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்து உள்ளனர். தலைநகர் கெய்ரோவில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் சக்காரா நகரில் அமைந்துள்ள சுடுகாட்டில் இருந்து இந்தப் பேழைகள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் சுடுகாடு ஒன்றில் ஆய்வுசெய்த தொல்பொருள் ஆய்வாளர்கள் முதலில் 13 ஈமப் பேழைகளை கண்டுபிடித்தனர் என்றும் தற்போது மேலும் 14 பேழைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பேழைகள் அனைத்தும் மரத்தால் செய்யப்பட்டு இருப்பதோடு பேழையின்மேல் கலைநயம் பொருந்திய ஓவியங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதையும் புகைப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
உலக நாகரிகத்தில் பெரும்பாலும் மன்னர் பரம்பரையினருக்கே இதுபோன்ற முக்கியத்துவம் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள சுடுகாடு சாதாரணமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுவரை 27 பேழைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ள அந்த இடத்தில் மேலும் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற எகிப்து நாகரிகம் 21 ஆம் நூற்றாண்டிலும் தனது பங்களிப்பை கொண்டிருக்கிறது என்பது மிகுந்த வியப்பை தருகிறது.