ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி. ரூ.2000க்காக கருத்தடை செய்த கூலித்தொழிலாளி
- IndiaGlitz, [Monday,November 28 2016]
மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. கருப்புப்பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் இதனால் பலவிதமான அசாதாரண சம்பவங்கள் நாடும் முழுவதும் நிலவி வருகிறது.
இந்த அதிரடி அறிவிப்புக்கு பின்னர் 50க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். ஏழை, எளிய நடுத்தர மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் சிறுநிறுவனங்கள் தவிக்கின்றன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த கூலி வேலை செய்பவர் ஒருவர் ரூ.2000 பணத்திற்காக கருத்தடை செய்து கொண்ட சோக சம்பவம் ஒன்றுகுறித்த தகவல்கள் வெளிவந்தூள்ளது.
உ.பி மாநிலம் அலிகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி புரன் ஷர்மா என்பவருக்கு கடந்த சில நாட்களாக வேலை இல்லாததால் தன்னுடைய இரண்டு குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கருத்தடை செய்தால் ரூ.2000 கிடைக்கும் என்ற அறிவிப்பை அறிந்த இவர் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டு ரூ.2000 பணத்தை பெற்று தற்போதைக்கு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்துள்ளார். இருப்பினும் இதே நிலை தொடர்ந்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று புரன் ஷர்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இவரை போன்று இன்னும் லட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்ல போகிறது?