'ஈட்டி' திரைவிமர்சனம். கூர்மையான பாய்ச்சல்
- IndiaGlitz, [Sunday,December 13 2015]
புதிய இயக்குனரின் படைப்பு, இன்னும் ஒரு சூப்பர் ஹிட் கூட கொடுக்காத அதர்வா என ஒருபக்கமும், ராசியான நாயகி ஸ்ரீதிவ்யா மற்றும் வெற்றி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என மறுபக்கத்தையும் உடைய 'ஈட்டி' திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸ் ஆன பின்னர் ரசிகர்களின் மனதை எந்த அளவுக்கு கவர்ந்ந்தது என்பதை பார்ப்போம்
சிறு காயம் பட்டால்கூட அதன் மூலம் வெளியாகும் ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே வரும் அபூர்வ நோய் கொண்டவர் அதர்வா. மகனின் விருப்பத்திற்கிணங்க அதர்வாவை அத்லெட்டிக் வீரராக அதே சமயம் மிக ஜாக்கிரதையாக வளர்க்கும் அப்பா ஜெயப்பிரகாஷ், பாசமுள்ள அம்மா மற்றும் தங்கை ஆகியோர்களுடன் தஞ்சையில் இருக்கும் அதர்வா, கோச் ஆடுகளம் நரேனின் உதவியுடன் ஓட்டப்பயிற்சி பெறுகிறார். இந்நிலையில் ஒரு ராங் கால் மூலம் மொபைல் போனில் அறிமுகமாகும் சென்னையில் வாழும் ஸ்ரீதிவ்யாவுடன் பார்க்காமலேயே காதல் செய்கிறார்.
இந்நிலையில் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நரேன் மற்றும் நண்பர்களுடன் சென்னை செல்லும் அதர்வா அங்கு எதிர்பாராமல் ஸ்ரீதிவ்யாவின் அண்ணனை கள்ள நோட்டு அடிக்கும் கும்பலில் இருந்து காப்பாற்றுகிறார். இதனால் அந்த கும்பல் அதர்வாவை கொலை செய்ய துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்கின்றாரா? போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றரா? ஸ்ரீதிவ்யாவுடனான காதல் என்ன ஆனது? என்பதுதான் மீதிக்கதை.
முதல் பத்து நிமிடங்களில் ரத்தம் உறையாத அபூர்வ நோய் குறித்தும், கிளைமாக்ஸின் முந்தைய விறுவிறுப்பான பகுதியையும் காட்டி சீட் நுனிக்கு ஆடியன்ஸ்களை கொண்டு வரும் இயக்குனர் பின்னர் பிளாஷ்பேக்கில் முழுக்கதையையும் கூறிவிட்டு மீண்டும் கிளைமாக்ஸுக்கு வருகிறார்.
அதர்வா-ஸ்ரீதிவ்யாவின் ஆரம்பகட்ட மொபைல் போன் காதல் 'குள்ளநரிக்கூட்டம்' படத்தை ஞாபகப்படுத்தினாலும் ரசிக்கும்படி உள்ளது. ஆனால் அதர்வா சென்னைக்கு வந்த பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் படம் வேகம் அடைகிறது. ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட கதையில் சரியான அளவுக்கு கமர்ஷியல் காட்சிகளை இயக்குனர் இணைத்ததில் இருந்தே அவருடைய புத்திசாலித்தனம் தெரிகிறது. ஆனால் கிளைமாக்ஸில் ஏற்படும் திருப்பத்தை சின்னக்குழந்தைகூட கண்டுபிடித்துவிடும். இயக்குனர் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்
ஸ்போர்ட்ஸ்மேன் கேரக்டருக்கு அதர்வா சரியான தேர்வு. ஆரம்பத்தில் நண்பர்களுடன் அரட்டை, அப்பாவிடம் காட்டும் பணிவு கலந்த மரியாதை, கோச் ஆடுகளம் நரேனிடம் காட்டும் குருபக்தி, ஸ்ரீதிவ்யா போனிலும் நேரிலும் செய்யும் ரொமான்ஸ், கள்ள நோட்டு கும்பலை அடித்து நொறுக்கும் ஆவேசம் என படம் முழுவதும் அதர்வா தனது அதிகபட்ச திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் அதில் கண்டிப்பாக அதர்வாவின் பங்கு பெருமளவு என்பது உண்மை.
நாயகி ஸ்ரீதிவ்யா எந்த உடையில் தோன்றினாலும் அழகு என்று கூறும்படி உள்ளார். சிரிப்பு அவருக்கு ப்ளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. படத்தின் கதையோடு ஸ்ரீதிவ்யாவின் கேரக்டர் செல்வது ஒரு ப்ளஸ்
ஆடுகளம் நரேனுக்கு நல்ல அழுத்தமான கேரக்டர். சென்னையில் போட்டிக்கு வந்த இடத்தில் தன்னுடைய மாணவன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டதை தவிக்கும் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஜெயப்பிரகாஷ் போல ஒரு அப்பா நமக்கு இருக்க மாட்டாரா? என்று ஏங்கும் அளவுக்கு அமைதியான நடிப்பு. ஆர்.என்.ஆர்.மனோகரின் வில்லத்தனத்தில் புதுமை இல்லை. அழகம் பெருமாளுக்கு சிறிய கேரக்டர் என்றாலும் ஓகே ரகம்.
படத்தின் எடிட்டர் ராஜா முகம்மதுவின் பணி மிகச்சிறப்பாக உள்ளது. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பின்னணி இசை. ஸ்போர்ட்ஸ், ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் காட்சிகளில் ஜி.வி.பிரகாஷின் பணி சிறப்பானது. பாடல்கள் சூப்பர் ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓகே ரகம். படத்தில் இரண்டே சண்டைக்காட்சிகள் என்றாலும் அனல் தெறிக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டருக்கு பாராட்டுக்கள்
பிரமாண்டம் என கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யாமல் ஒரு அழுத்தமான அதே நேரத்தில் விறுவிறுப்பான கதையை நம்பி முதலீடு செய்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். கண்டிப்பாக இந்த படம் அவருக்கு கண்டிப்பாக லாபத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் 'ஈட்டி' கூர்மையானதுதான்