தமிழகத்தின் அரியர் கேன்சல் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது… கிடுக்குப்பிடி காட்டும் AICTE!!!
- IndiaGlitz, [Friday,September 04 2020]
கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கல்லூரி கல்வி பயின்றுவரும் மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அரியர் மாணவர்களின் ஆஸ்தான தெய்வம் என்றும் முதல்வரைப் புகழ்ந்து தள்ளினிர். இதன் மூலம் அரியர் வைத்திருந்த அனைத்து கல்லூரி மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களுக்குத் தேர்வு எழுதாமலே மதிப்பெண் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது தமிழக அரசு அறிவித்த அரியர்ஸ் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் (AICTE) ஏற்க மறப்பு தெரிவித்து இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. AICTE இதுகுறித்து அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களை தேர்ச்சியடைய செய்வது ஏற்புடயது அல்ல எனத் தெரிவித்ததாகவும் அதுகுறித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் ரத்துச் செய்யப்படவில்லை. இதுகுறித்து வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் நடத்தி முடித்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருந்தது. அந்த அடிப்படையில் கல்லூரி மாணவர்களை இறுதியாண்டு தேர்வுக்கு தயாராகும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேர்வுகள் நடக்கும் தேதி குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சென்னை அண்ணா பல்கலைக் கழகம் செய்தி குறிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் அரியர் தேர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருப்பது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.