12ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்: பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக ஏற்கனவே கடந்த ஆட்சியின் போது தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது கண்டிப்பாக 12ஆம் வகுப்பு தேர்வு நடக்கும் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’இன்று நடந்த கூட்டத்தில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட பலரிடம் நடத்திய ஆலோசனையில் அனைவரும் கூறிய ஒருமித்த கருத்து என்னவெனில் கண்டிப்பாக தேர்வு என்பது முக்கியமானது என்றும் அதனால் தேர்வை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து 12-ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். அது எப்போது நடத்தப்படும் என்பதை முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்வோம்.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் எப்போது கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை அறிவிக்கின்றதோ, அதன்பிறகு 12ஆம் வகுப்பு தேர்வு நடக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். ஆனால் அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுமே தவிர ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் அவர் உறுதியாக கூறினார்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து விரைவில் ஆலோசனை செய்யப்பட்டு அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சரின் இந்த பேட்டியை அடுத்து இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுவது உறுதி என்று தெரிகிறது.