எதிர்பார்த்தது போலவே பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,May 31 2024]

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிகள் திறந்து விட்டு அதன் பிறகு மீண்டும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதற்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என்றும் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பள்ளிகள் திறக்கும் தேதியை 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு தற்போது ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: 'வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாணவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.