மாநகரம் படக்குழுவினர்களுக்கு பிரபல எடிட்டர் பாராட்டு
- IndiaGlitz, [Tuesday,February 21 2017]
இன்றைய இளையதலைமுறை அறிமுக இயக்குனர்கள் திரைத்துறையில் எண்ட்ரி ஆகும்போது தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதால் கோலிவுட் ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் 'துருவங்கள் 16' படத்தின் வெற்றி இளைஞர்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதைபோலவே இன்னொரு அறிமுக இயக்குனரான லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாநகரம்' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படம் குறித்து பிரபல எடிட்டர் பிரவீன் K.L கூறியதாவது:
நேற்று எனக்கு மாநகரம் திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இளம் குழு ஒன்று மிக தெளிவான , தரமான ஒரு படத்தை உருவாக்கி உள்ளது. படம் ஆரம்பமாகும் முதல் பிரேமில் இருந்து இறுதி வரை படம் நம்மை கட்டி போடுகின்றது என்பது தான் உண்மை. இப்படத்தை பொறுத்தவரை கதையும் படத்தை உருவாக்கியுள்ள விதமும் நம்மை வியக்கவைக்கிறது.
ஒரு எமோஷனலான காட்சியை பேப்பரில் எழுதிவிட்டு அதை படமாக எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இயக்குநர் லோகேஷ் அவருடைய பாணியில் சரியாக செய்துள்ளார். படத்திருக்கு ஒளிப்பதிவு , பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கிறது. நிச்சயம் இவை அனைத்தும் காலம் கடந்து பேசப்படும்.
இப்படத்தில் சார்லி, சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, முனிஸ்காந்த் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு , எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரை இப்படத்தை தயாரிக்க முடிவெடுத்ததற்காகவே நாம் பாராட்டியாக வேண்டும். மாயா, ஜோக்கர், காஷ்மோரா, இப்போது மாநகரம். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தென்னகத்தின் UTV Spot Boy என்று நம்மை பாராட்ட வைக்கிறது.
இப்படத்தின் மொத்த குழுவையும் நான் இந்த மிகச்சிறந்த முயற்சிக்காக நான் பாராட்டுகிறேன். சினிமாவை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் மாநகரம். இந்த படத்தை நிச்சயம் பார்த்து ரசியுங்கள். மாநகரம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
இவ்வாறு எடிட்டர் ப்ரவீண் கூறியுள்ளார்.