சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
- IndiaGlitz, [Friday,January 15 2021]
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாளை சிறப்பித்து உள்ளார். அடிப்படையில் நான் ஒரு விவசாயியாகவே இருக்கிறேன் எனக் கூறிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்பொங்கல் திருநாள் ஒரு சிறப்பான விழாவாக இருக்கிறது. அத்திருநாளில் சொந்த ஊரில் பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடுவதை எப்போதும் வழக்கமாக கொண்டு உள்ளார்.
பொங்கல் திருவிழாவிற்காக சேலம் வருகை தந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் வீட்டின் முன்னே உள்ள பாலமுருகன் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தார். பின்பு சாமி முன் படையலிட்டு குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்தார். அடுத்தாக பசுமாடு, காளை, ஆடு போன்றவற்றிற்கு கரும்பு, பொங்கல் போன்றவற்றை ஊட்டிய தமிழக முதல்வர் தன்னுடைய சொந்த கிராம மக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு போன்றவற்றை வழங்கினார்.
தமிழக முதல்வர் சிறப்பித்த இந்தப் பொங்கல் விழாவில் அவரோடு சிலுவம்பாளையத்தின் அனைத்துப் பொது மக்களும் கலந்து கொண்டனர். உடன் கட்சி நிர்வாகிகள் சிலரும், முக்கிய உறவினர்களும் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.