அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்!
- IndiaGlitz, [Tuesday,January 19 2021]
அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். டெல்லி சந்திப்புக்கு பின்பு இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரைச் சந்தித்த போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறிய அவர் தற்போது அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என அதிரடியாகத் தெரிவித்து உள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்றிருக்கும் சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆகிறார். இந்நிலையில் அவரது வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற சர்ச்சை எழுந்து உள்ளது. மேலும் அவர் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா? என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு எனும் இரண்டு விதமான கருத்துகளும் சில தினங்களாக கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் கே.பி. முனசாமி போன்ற அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் சசிகலா வெளியே வந்தாலும் கட்சியில் எந்த பிரச்சனையும் வராது. அதிமுகவில் அவர் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிரடி காட்டி வந்தனர்.
இந்நிலையில் அதிமுகவின் அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா ஒரு உரையாடலின் போது சசிகலாவை புகழ்ந்தார். இந்நிகழ்வு கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்த கோகுல இந்திராவின் பேச்சுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தச் சர்ச்சை முடிவதற்குள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பகிர்ந்து இருந்தார். அதில் அதிமுக-அமமுக இடையே நடைபெற்று வருவது பங்காளி சண்டைதான். சசிகலா வெளியே வந்ததும் அவரது வருகை அதிமுகவை பலப்படுத்தும் எனக் கூறி இருந்தார். இந்தக் கருத்தும் கட்சிக்குள் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அப்பத்திரிக்கையின் ஆண்டு விழா கூட்டத்தில் பேசியபோது, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கருத்துக் கூறி இருந்தார். ஏற்கனவே அதிமுகவை பாஜகவுடன் இணைத்து சிலர் விமர்சித்து வரும் நிலையில் இந்தக் கருத்து மேலும் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்தனை விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்று திட்டவட்டமாகக் கருத்து வெளியிட்டு உள்ளார். இந்தக் கருத்துப் பகிர்வு தமிழக அரசியலில் பல எதிர்வினைகளை உருவாக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.