உதயமாகிறது தமிழகத்தின் 38 ஆவது மாவட்டம்!!!
- IndiaGlitz, [Monday,December 28 2020]
தமிழகத்தின் புதிய மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. இதற்கான அரசாணையை வெளியிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. அதில் முதன் முதலாக நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியைப் பிரித்து அதுவும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
மேலும் புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர் உள்ளிட்ட நிர்வாக வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த மார்ச் மாதமே அறிவிப்பு வெளியானது. அதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்வதற்கு சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இப்படி உருவாக்கபட்ட குழுவின் புதிய அறிக்கையைப் பெற்று இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக புதிய மாவட்டமான மயிலாதுறையை தொடங்கி வைத்தார். இதனால் தமிழக மாவட்டங்களின் எண்ணக்கை 38 ஆக உயர்ந்தது.