அன்று எட்டப்பன்… இன்று செந்தில்பாலாஜி… பிரச்சாரத்தின்போது முதல்வர் காட்டம்!
- IndiaGlitz, [Wednesday,March 24 2021]
அதிமுகவில் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகள் வகித்த செந்தில்பாலாஜி அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராகவும் உயர்ந்தார். பின்பு ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவரை பதவியில் இருந்து விலக்குவதாக அதிமுக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் செந்தில்பாலாஜி அதிமுக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட்ட அமமுக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கு பின்பு அங்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் அடிப்படையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு தற்போது எம்எல்ஏ வேட்பாளராகவும் களம் இறங்கி உள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கரூர் தொகுதியில் திமுக சார்பில் நிற்கும் எம்எல்ஏ வேட்பாளர் செந்தில்பாலாஜியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எட்டப்பன் என்று விமர்சித்து இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக கட்சியை கார்ப்பரேட் கம்பெனி என்றும் அங்கு யார் வேண்டுமானாலும் ஷேர் போடலாம்” என்றும் விமர்சித்தார். அதோடு செந்தில்பாலாஜியும் அங்கு தன்னுடைய ஷேரை போட்டு இருக்கிறார் என்றும் அதிமுகவை கவிழ்ப்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார் என்றும் அன்று எட்டப்பன் இருந்தார், இன்றைக்கு செந்தில்பாலாஜி இருக்கிறார் என்றும் காரசாரமாக பேசியுள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வீரபாண்டிய கட்டபொம்மனை அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த எட்டப்பன் காட்டிக் கொடுத்துவிட்டார் என்ற அரசியல் வரலாற்றை பலரும் அறிந்து இருக்கிறோம். அத்தகைய வரலாற்று பிம்பம் கொண்ட ஒரு துரோகத்தின் பெயரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜிக்கு பயன்படுத்தி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.