அரசு விழாவாக மாறும் கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள்! தமிழக முதல்வர் அறிவிப்பு!
- IndiaGlitz, [Wednesday,February 10 2021]
புகழ் பெற்ற ஆன்மீகச் சொற்பொழிவாளரும் சிறந்த முருகப் பக்தராகவும் அறியப்பட்ட கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் விழா இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். தமிழக முதல்வர் நேற்று வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது தமிழக விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட பயிற்கடன் தள்ளுபடிக்கான ரசீது இன்னும் 10-15 நாட்களில் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் மறைந்த முருகப் பக்தரும் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளருமான கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 25) இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
புகழ் பெற்ற முருகப் பக்தரான கிருபானந்த வாரியார் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே உள்ள பாலாற்றங் கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் எனும் சிறிய ஊரில் கடந்த 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார். இவர் கடவுள் முருகன் மீது கொண்டுள்ள அளவற்ற பக்தி மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகளினால் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.