சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!
- IndiaGlitz, [Monday,May 10 2021]
தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து அதிமுக எம்.ல்.ஏக்களின் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூட்டப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த நிலையில் தற்போது தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து யார் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பு வகிப்பது என்ற கேள்வியை பலரும் முன்வைத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டே நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.