டீக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,May 09 2020]
தமிழகத்தில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஒருசில தளர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்
தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் மே 11 ஆம் தேதி முதல் டீ கடைகளை திறக்கலாம். டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. கடைகளில் நின்றோ, அமர்ந்தோ டீ குடிக்க கூடாது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீ கடைகளை திறக்க அனுமதி இல்லை.
தமிழகம் முழுவதும் மே 11 முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.
சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படலாம். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.
சென்னையில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலுள்ள தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம்.
எனவே சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகள் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று முதல்வரின் இந்த அறிவிப்பின் மூலம் தெரிய வருகிறது