யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி? முதல்வர் நாற்காலி கிடைக்குமா?
- IndiaGlitz, [Tuesday,February 14 2017]
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலமைச்சர் ரேஸில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி புதிய அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் சீனியர் அமைச்சர்களில் ஒருவராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணி, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து வருபவர்.
தனது எடப்பாடி தொகுதியில் மக்களின் முழு ஆதரவை பெற்றதால் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது இலாகா பொறுப்பை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவர்தான் பரிசிலீக்கப்பட்டனர். இவர்களில் ஓபிஎஸ் பின்னர் தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல் ஜெயலலிதா மறைந்த பின்னர் அடுத்த முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் சசிகலா தரப்பினரால் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இறுதியில் ஒபிஎஸ் தான் முதல்வராகப் பொறுப்பேற்றார். .
கடந்த சில நாட்களாக முதல்வர் பொறுப்பை ஏற்பது சசிகலாவா? ஓபிஎஸ் அவர்களா? என்ற போட்டி இருந்த நிலையில் தற்போது தீர்ப்புக்கு பின்னர் ஓபிஎஸ் அவர்களா? பழனிச்சாமி அவர்களா? என்ற நிலை மாறியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தேர்வு செய்திருந்தாலும் செங்கோட்டையன் உள்பட பலர் அவர் மீது அதிருப்தியில் உள்ளதால் அவரால் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி செல்ல முடியுமா? என்பது கேள்விக்குறியே என்று கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம், பழனிச்சாமி இவர்களில் யார் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் உட்கார போகின்றார்கள் என்ற கிளைமாக்ஸ் இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்