திமுக எம்.பி.கௌதம சிகாமணியின் சொத்துக்கள் முடக்கம்… விதிமுறைகளைமீறி வருவாய் ஈட்டியதால் நடவடிக்கை!!!

  • IndiaGlitz, [Saturday,October 17 2020]

 

கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இன்றி வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதால் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்னிய செலவாணி சட்டத்தின் கீழ் கௌதம சிகாமணியின் சொத்துகளை முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கௌதம சிகாமணி முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.7.05 கோடியை மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அமலாக்கத் துறையினர் இவரின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கௌதம சிகாமணிக்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள அசையாத சொத்துக்களான வேளாண் நிலங்கள், வணிக மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் அசையும் சொத்துக்களான வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் உள்பட ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகள், அன்னிய செலவாணி சட்டத்தின் கீழ் முடக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.