ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்: அமலாக்கத்துறை அதிரடி
- IndiaGlitz, [Wednesday,August 21 2019]
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மீது ஐ.என்.எஸ் மீடியா குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி மனு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட நிலையில் அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் ப.சிதம்பரம் வீட்டில் இல்லை
இந்த நிலையில் இரவு 2 மணிக்குள் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இந்த நிலையில் ப.சிதம்பரம் சார்பில் சுப்ரிம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சற்றுமுன் விசாரணைக்கு வந்தபோது ப.சிதம்பரம் வழக்கை தலைமை நீதிபதிக்கு மாற்றுவதாக நீதிபதி ராணா தெரிவித்தார். அதுவரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடையில்லை என்றும் அவர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பின் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. தலைமை நீதிபதியும் முன்ஜாமீன் அளிக்கவில்லை என்றால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது