ரூ.824 கோடி வங்கி மோசடி: பிரபல சென்னை நகைக்கடை அதிபர் கைது
- IndiaGlitz, [Friday,May 25 2018]
இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்வது என்பது கடந்த சில வருடங்களாக சர்வ சாதரணமாக நடைபெற்று வரும் நிகழ்வாக உள்ளது. ஏற்கனவே விஜய்மல்லையா, நீரவ் மோடி உள்பட ஒருசில தொழிலதிபர்கள் பல்லாயிரம் கோடி வங்கிகளில் கடன்வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் ஒரு நகைக்கடை அதிபர் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள கனிஷ்க் நகைக்கடை அதிபர் பூபேஷ்குமார் ஜெயின் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கடந்த மார்ச் மாதமே வங்கி மோசடி குறித்த தகவல் வெளிவந்தது என்றாலும் அவர் தற்போதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டி 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி மோசடியாக கடன் பெற்றதாகவும், பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி மற்றும் நிலுவைத் தொகையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செலுத்தவில்லை என்றும் இந்நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.