எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்: வீரியம் இல்லாத எச்சரிக்கை
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற டைட்டிலே வித்தியாசமாக இருந்தது மட்டுமின்றி இந்த படத்தின் இயக்குனர் சார்ஜுனின் இரண்டு குறும்படங்கள் ஏற்படுத்திய பரபரப்பும் இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
சிறு வயதிலேயே அக்காவை கொலை செய்த அக்காள் கணவரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற கிஷோர், தண்டனை முடிந்து திரும்பி வந்து அக்காள் மகன் விவேக் ராஜகோபாலுடன் தங்குகிறார். இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ வரலட்சுமியை கடத்தி அவர் தந்தையிடம் பணம் பறிக்க திட்டமிடுகின்றனர். திட்டபடியே கடத்தலும் மிகச்சரியாக நடக்கின்றது. அதன்பின்னர் வரலட்சுமியின் தந்தையை மிரட்டி பணம் கேட்க, அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான சத்யராஜை நாடுகிறார். இதன்பின்னர் ஒருசில திருப்பங்கள், கடத்தல்காரர்களுக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகள், வரலட்சுமியின் பின்னணியில் உள்ள சஸ்பென்ஸ் மற்றும் சத்யராஜிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஆகியவைதான் இந்த படத்தின் மீதிக்கதை
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக கம்பீரமான தோற்றத்தில் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் சத்யராஜ். மகளுக்கு ஏற்பட்ட வித்தியாசமான நோயால் அவர் துடிப்பதை பார்த்து கண்கலங்குவது, கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க போடும் திட்டம், கடைசியில் திடீரென அதிரடி முடிவெடுப்பது என அவருக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளார். 'பார்க்காத வேலைக்குக் சம்பளம் வாங்குறதும், பார்த்த வேலைக்கு சம்பளம் வாங்கமால் இருப்பதும் தப்பு' என்ற வசனத்தில் மட்டும் சத்யராஜ் கவனம் பெறுகிறார்
இந்த படத்தின் முக்கிய உயிர் நாடி கிஷோர் கேரக்டர்தான். அவசரப்பட்டு செய்த கொலைக்காக 15 வருட வாழ்க்கையை தொலைத்துவிட்டதை கூறுமிடமிடத்திலும், கடத்தலுக்கு திட்டமிடுதலும், மச்சினன் விவேக் ராஜகோபாலிடம் தெரியும் மாற்றத்தை கண்டுபிடிப்பதிலும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் தான் சிறையில் இருந்தபோது உனக்காகத்தான் இதையெல்லாம் செய்தேன் என்று கலக்கத்துடன் கூறும் காட்சியில் கண்ணீரை வரவழைக்கின்றார் கிஷோர்
வரலட்சுமியின் நடிப்பில் முதல் கால்மணி நேரத்தில் கண்களில் வெளிப்படுத்தும் பயம் சூப்பர். தான் ஏன் கடத்தப்பட்டோம் என்பது புரியாமல் இருப்பது, எப்படி கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிக்கலாம் என்று யோசிப்பது என கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பின்னர் ஒரு சிறிய சஸ்பென்ஸ் உடைந்த பின்னர் அவருடைய கேரக்டர் வலுவிழந்துவிட்டது. தாமஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள விவேக் ராஜகோபால் நடிப்பு ஓகே. அவருடைய நண்பராக ஒருசில காட்சிகளில் வரும் யோகிபாபுவின் காமெடியில் கடும் வறட்சி.
'8 தோட்டாக்கள்' படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி தான் இந்த படத்தின் இசையமைப்பாளர். ஒருசில காட்சிகளில் 'கத்தி' படத்தின் தீம் மியூசிக்கை ஞாபகப்படுத்துகிறார். இதுபோன்ற த்ரில் படத்திற்கு பாடல்களே தேவையில்லை. ஆனால் வலுக்கட்டாயமாக பாடல்களை திணித்துள்ளார். திணித்த பாடல்களும் பெரிதாக கவரவில்லை
ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசனின் கேமிரா பணி பாராட்டுதலுக்குரியது. அதேபோல் படத்தில் தேவையில்லாத காட்சிகளை கட் செய்திருந்தால் எடிட்டர் கார்த்திக் பணியும் சிறப்பானதாக இருந்திருக்கும்
'மா' மற்றும் 'லட்சுமி' ஆகிய குறும்படங்கள் மூலம் உலகையே தன்பக்கம் திரும்ப வைத்தவர் இயக்குனர் சர்ஜூன். இந்த படத்தில் ஒரு த்ரில் கடத்தல் கதையை கொடுத்துள்ளார். ஆனால் கதை ஒரே போக்கில் செல்லாமல் திடீரென வரலட்சுமியின் காதல், சத்யராஜின் செண்டிமெண்ட் என திசை திரும்புவதால் வலுவிழக்கின்றது. கோடீஸ்வரியாக இருந்தாலும் நாயகி ஒரு திருடனை, கடத்தல்காரனை, கொலைகாரனைத்தான் காதலிப்பார் என்ற தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவையே இவரும் கடைபிடித்துள்ளார். மேலும் வரலட்சுமியின் கேரக்டரில் பல சந்தேகங்களும் குழப்பங்களும் உள்ளது. அந்த குழப்பத்தை இங்கே விவரித்தால் படத்தின் சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் சொல்லாமல் விட்டுவிடுகிறோம்.
அதேபோல் கடத்தல்காரர்களை பிடிக்க சத்யராஜ் போடும் திட்டங்கள் எதிலும் எந்த புதுமையும் இல்லை. ஒரு கான்ஸ்டபிள் இந்த கேசை விசாரித்தால் எந்த கோணத்தில் விசாரிப்பாரோ, அந்த அளவுக்குத்தான் இருந்தது அவருடைய திட்டங்கள். திரைக்கதையில் ஆங்காங்கே திடீர் திருப்பங்கள் இருந்தாலும் அந்த திருப்பங்கள் ஆச்சரியப்பட வைக்காதது திரைக்கதையின் பலவீனம். மேலும் ஒரு விறுவிறுப்பான கடத்தல் கதையில் பாடல்கள் தேவையா? வரலட்சுமிக்காக இரண்டு பாடல்கள் திணிக்கப்பட்டுள்ளது திரைக்கதையின் வேகத்தை குறைக்கின்றது. எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய வலிமை பணத்திற்கு இல்லை என்பதை கடைசி பத்து நிமிட காட்சியில் கூறுவது மட்டும் மனதில் பதிகிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல த்ரில் படமாக உருவாகியிருக்க வேண்டிய இந்த படம் பலவீனமான திரைக்கதையால் பத்தோடு ஒன்றாக உள்ளது.
Comments