ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்தது தேர்தல் ஆணையம்
- IndiaGlitz, [Tuesday,November 28 2017]
அரசியல் கட்சிகள் தான் தேர்தல் சமயத்தில் கூட்டணி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் ஆணையமே உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்குடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் 18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் வாக்காளர்களுக்காக படிவத்தில் பதிவு செய்ய ஞாபகப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போது ஃபேஸ்புக்கில் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் அவர்களுடைய பிறந்த நாளின்போது வாழ்த்துக்களை ஃபேஸ்புக் கூறி வருகின்றது. இந்த நிலையில் இனிமேல் 18 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பும்போது, கூடவே புதிய வாக்காளர்களுக்கு பதிவு செய்ய அறிவுறுத்தும் வாசகங்களும் வரும். மேலும் தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் பதிவு செய்யும் இணையதளத்தின் லிங்க்கும் அதில் இருக்கும். அந்த லிங்க்கை க்ளிக் செய்து 18 வயது பூர்த்தியான ஃபேஸ்புக் பயனாளிகள் புதிய வாக்காளர்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம்
இந்த சேவை தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, உருது, அஸ்ஸாமி, மராத்தி மற்றும் ஒரியா என 13 மொழிகளில் வழங்கப்படும். இந்த புதிய முயற்சி மூலம் 18 வயது பூர்த்தியானவர்கள் அதிகளவில் வாக்காளர் பட்டியலில் இணைவார்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.