ஊரடங்கில் இருப்பதால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா??? அடிப்படைக் காரணம் என்ன??
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் கொரோனா பற்றிய தகவல்கள் மட்டுமே தொடர்ந்து பேசப்படுகிறது. இதன் தொடர் தாக்கம் மக்கள் மத்தியில் மன அழுத்தத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஒருபக்கத்தில் அரசுகளும் நோய் பற்றிய பரவல், தாக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருவதால் மக்களுக்கு எதிர்மறையான கருத்துகள் தோன்றுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என மனநல வல்லுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இவர்களின் கருத்துகளை மெய்ப்பிக்கும் பொருட்டு தற்போது கொரோனா அறிகுறிகள் ஏற்பட்ட பலர் அடுக்குமாடிகளில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகமாகச் சாப்பிடுவதும் அத்தகைய மன அழுத்தங்களில் ஒன்றுதான் என மனநல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஒருபக்கம் மக்களை கடுமையான வறுமைக்கு தள்ளியிருக்கிறது. இவர்களைத் தவிர தற்போது வீடுகளில் முடங்கியிருக்கும் நடுத்தர மற்றும் பொருளாதார வளர்ச்சிபெற்ற குடும்பங்களில் உள்ள பலரும் அதிகமாக சாப்பிடுவதாக தரவுகள் தெரியவருகிறது. அதுவும் தனியாக இருப்பவர்கள் மேலும் அதிகமாகச் சாப்பிடுவதாகத் தெரிவிக்கின்றனர். காரணம் வேலை எதுவும் இல்லாமல் வெறுமனே சாப்பிடுவதில் நேரத்தை செலவிடுவதாக நாம் நினைக்கலாம். வேலை எதுவுமில்லை என்ற காரணம் ஒருபக்கம் இருந்தாலும் திடீரென்று அதிகமாகச் சாப்பிடுவது இயல்புக்கு மீறியது எனவும் இது கடுமையான மன அழுத்தத்தின் தாக்கம் எனவும் தற்போது மனநல வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பயம், பதட்டம், எதிர்மறை கருத்துக்களால் பலர் தங்களது தூக்கத்தையும் இழந்து தவிப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு அடிப்படையான காரணம் இயல்பு வாழ்க்கையில் தோன்றும் குழப்பம், பதட்டம் போன்றவை அவர்களின் தூக்கத்தில் பிரதிபலித்து பலருக்கு கொடூரமான கனவுகளையும் வரவழைத்து விடுகிறது. வேலை எதுவும் இல்லாததால் பலரும் அதிகபடியான நேரத்தைத் தூங்குவதற்கு செலவிடுகின்றனர். அதிகபடியான தூக்கம் ஏற்கனவே உள்ள வாழ்க்கையின் அனுபவத்தை அல்லது பதட்டத்தை வெளிப்படுத்துவதற்கு போதுமான காரணியாக மாறி நீண்ட கனவுகளை வரவழைத்து விடுகிறது. கொரோனா தாக்கத்தினால் வாழ்க்கையின் போக்கே மாறி மக்களின் நோய் எதிர்ப்பு மண்டலங்களின் ஆற்றலையும் குறைத்து விடும் எனவும் சில மனநல வல்லுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மனவலிமை குறைந்து பதட்டம், எரிச்சல், வாழக்கை பற்றிய பயம் போன்ற பல காரணிகள் மக்களைத் தற்போது அமைதியாகத் தாக்கி வருகிறது.
இத்தனை பதட்டத்தையும் மக்கள் தாம் செய்யும் வேலைகளில், அன்றாடப் பழக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் பதட்டம்தான் தற்போது அதிகபடியான சாப்பாட்டிற்கும் ஒருகாரணமாக இருக்கிறது. இதுகுறித்து கவலைக் கொள்ள வேண்டாம் எனவும் சில மனநல ஆலோசகர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். உடல் பருமன் போன்ற பிரச்சனைகளைப் பற்றி கவலைக்கொள்ள வேண்டாம், நாம் கடுமையான சூழலில் வாழ்ந்து வருகிறோம். இத்தகையத் தருணங்களில் மன நலத்தைப் பாதுகாப்பதே சிறந்தது எனவும் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments