குறைவாக சம்பளம் கொடுத்ததால் திருடினேன்.. ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி வாக்குமூலம்..!
- IndiaGlitz, [Wednesday,March 29 2023]
ஐஸ்வர்யா வீட்டில் திருடிய ஈஸ்வரி, காவல்துறையிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தனக்கு குறைவாக சம்பளம் கொடுத்ததால் தான் திருடினேன் என்றும் தான் திருடுவதற்கு காரணம் ஐஸ்வர்யாவின் கவனக்குறைவு தான் என்றும் வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது வீட்டில் பணிபுரிந்த ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஈஸ்வரியை தற்போது காவல்துறையினர் விசாரணை செய்து வரும் நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்கள் வேலை செய்கிறார்கள், நான் மட்டுமே பெண், அதனால் ஐஸ்வர்யா தன்னை நெருக்கமாக வைத்துக் கொள்வார் என்றும் அதனால் நான் ஐஸ்வர்யா நகைகளை எங்கே வைப்பார்? லாக்கர் எங்கே இருக்கிறது? லாக்கர் சாவி எங்கே இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்றும் கூறினார்.
முதலில் கொஞ்சம் நகைகளை மட்டும் திருடினேன் என்றும் ஆனால் ஐஸ்வர்யா வீட்டில் உள்ள யாருமே அதை கண்டு பிடிக்கவில்லை என்பதால் அடுத்தடுத்து நகைகளை அதிகமாக திருடினேன் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் ஐஸ்வர்யா தான் தன்னை திருடத் தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா தனக்கு மாதம் 30 ஆயிரம் மட்டுமே சம்பளம் கொடுத்ததாகவும் அந்த சம்பளம் தனது போதவில்லை என்பதால் தான் அவரது வீட்டில் திருடினேன் என்றும் அவர் கூறினார். இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் மாதம் 30 ஆயிரம் என்பது குறைவான சம்பளமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.