இபாஸ் ரத்து, மெட்ரோ ரயில், பேருந்து இயங்கும்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புகள்
- IndiaGlitz, [Sunday,August 30 2020]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இபாஸ் கண்டிப்பாக தேவை என்ற நடைமுறை இருந்த நிலையில், சற்று முன் வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான இபாஸ் முறை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம் ரயில் மற்றும் பிற வாகனங்களின் வருபவர்களுக்கு மட்டுமே இபாஸ் உண்டு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களும் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு அனுமதித்துள்ள தமிழக அரசு சென்னையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்றும், ஞாயிறு அன்று இனிமேல் முழுமுடக்கம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். ஆனால் மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு அனுமதி இல்லை.
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி என்றும், ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி என்றும், இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.