கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயங்கள் புத்தாண்டு பரிசாக, லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாடு மின்வாரியத்தில், வேலூர் மண்டல தலைமைப் பொறியாளராக நந்தகோபால் என்பவர் உள்ளார். இவரின் கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன. இதற்கான தலைமை அலுவலகம், வேலூரை அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ளது.
இந்தநிலையில், தலைமைப் பொறியாளர் நந்தகோபால் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனக்குக்கீழ் நிலையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி நகை, பணத்தைப் பரிசு பொருள்களாகப் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி, பிரியா உட்பட 9 பேர் அடங்கிய குழுவினர் காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நேற்று மாலை 5 மணியளவில் அதிரடியாக நுழைந்தனர்.
மாளிகை முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், 48 கிராம் தங்க நாணயங்கள், ரூ.1,53,000 ரொக்கப் பணம், வெள்ளி டம்ளர்கள், குங்குமச் சிமிழ், பண்டல் பண்டல்களாகப் புது ஆடைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. பரிசுப் பொருள்களை லஞ்சமாக வாங்கிக் குவித்த மண்டல தலைமைப் பொறியாளர் நந்தகோபால் மற்றும் பரிசுப் பொருள்களை வசூலித்துக் கொடுக்க வந்த அதிகாரிகள் சிலரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரெய்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியது, நந்தகோபால் உட்பட மேலும் சில அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்று வழக்குப்பதிவு செய்யப்படும். தலைமைப் பொறியாளர் பதவியில் உள்ள நந்தகோபால் இன்னும் 7 மாதங்களில் பணி ஓய்வுபெறுகிறார். அதனால்தான், லஞ்சம் வாங்கிக் குவிக்க முடிவுசெய்துள்ளார்’ என்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Sai Surya
Contact at support@indiaglitz.com
Comments