வரட்டியை வைத்து ஒருவர்மீது ஒருவர் அடித்துக் கொள்ளும் வினோத திருவிழா!
- IndiaGlitz, [Thursday,April 15 2021]
தமிழகத்தில் அம்மன் கோவில் திருவிழாக்களின்போது மஞ்சள் கலந்த தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டு விளையாடுவது வழக்கம். இந்த மஞ்சள் நீரை முறைமாமன் மீது முறைப்பெண்கள் அடித்துக் கொண்டு விளையாடும்போது இத்திருவிழா இன்னும் சுவாரசியமாக இருக்கும். இதுபோன்ற காட்சிகளை பழைய தமிழ் சினிமாக்களில் பார்த்து இருப்போம்.
அப்படி ஒரு திருவிழா ஆந்திரா மாநிலம் கர்னூல் பகுதியில் கொண்டாடப்பட்டு உள்ளது. ஆனால் மஞ்சள் நீருக்குப் பதிலாக அந்த மக்கள் மாட்டுச் சாணத்தால் செய்யப்படும் வரட்டியை பயன்படுத்தி இருப்பதுதான் வினோதம். கர்னூல் மாவட்டத்தில் உள்ள கைருப்பாலா எனும் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டு யுகாதி பண்டிகையை முன்னிட்டும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
காரணம் பத்ரகாளி அம்மனும் வீரபத்ர சுவாமியும் காதலித்ததாகவும் அந்தக் காதலுக்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்து இருதரப்பினரும் கடுமையாகச் சண்டையிட்டுக் கொண்டதாகவும் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இந்தச் சண்டையை நியாபகப்படுத்தும் விதமாக கைருப்பாலா கிராம மக்கள் மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட வரட்டியை கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்கி விளையாடுகின்றனர். இந்த விளையாட்டின்போது சில நேரங்களில் காயம் ஏற்பட்டாலும் மஞ்சள் கலந்த திருநீறை மக்கள் பூசிக் கொள்வதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இதுபோன்ற திருவிழாக்களில் இருக்கும் மகிழ்ச்சியை இன்றைக்குப் பெரும்பாலான கிராமங்கள் தொலைத்து விட்டன என்பதும் மற்றொரு வருத்தமான விஷயம்.