வெளுத்து வாங்கும் கனமழையால் அதிகரிக்கும் உயிரிழப்பு!
- IndiaGlitz, [Wednesday,October 20 2021]
உத்திரகாண்ட்டில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்ற நூற்றுக் கணக்கானவர்களின் நிலைமை குறித்து கடும் சந்தேகம் எழுந்துள்ளது.
உத்திரகாண்டில் கடந்த 24 மணிநேரத்தில் 200 மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அல்மோராவில் 216.6 மிமீ கனமழையும் துவாரஹாவில் 184 மிமீ, நைனிடாவில் 90மிமீ மழை பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை கொட்டித் தீர்த்து இருப்பதால் ஒட்டுமொத்த உத்தரகாண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற சுற்றுலா தலங்களுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சென்றதாகவும் அவர்களின் நிலைமை தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர இன்னொரு சுற்றுலா தலமான நைனிடால் பகுதியின் 3 பிரதான சாலைகளும் தற்போது வெள்ளத்தால் சூழப்பட்டு இருக்கிறது. மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் நைனிடால் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி சுவர் இடிந்து விழுந்து 5 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மாநிலத்தில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு பாதிப்புகளினால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
இதேபோல கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் 24 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 11 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்த நிலையில் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.