சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
- IndiaGlitz, [Saturday,November 30 2019]
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மழை பற்றிய கணிப்பை அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் இதனை உறுதி செய்திருந்தார்
இதனை அடுத்து வானிலை அறிவிப்பில் சொன்னது போலவே இன்று அதிகாலை முதல் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், வேளச்சேரி, கேகே நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது
சென்னை மட்டுமன்றி சென்னை சுற்றுப்புறத்திலுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனையடுத்து சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிப்புச் செய்துள்ளனர்
மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்