டப்பிங் கலைஞர்களின் தேசிய விருது கோரிக்கை: மத்திய அரசு ஏற்குமா?

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சண்டைப்பயிற்சி இயக்குனர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்று இந்த வருடம் முதல் சண்டைப்பயிற்சிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் முதல் விருதை 'புலிமுருகன்' படத்திற்கு சிறப்பாக சண்டைப்பயிற்சி அமைத்த பீட்டர் ஹெய்ன் பெற்றார்.
இந்த நிலையில் டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞர்கள் தங்களுக்கும் தேசிய விருது வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் கே.ஆர். செல்வராஜ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கம் 1,600-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. பாரம்பரியமான இச்சங்கத்தில் பழம் பெரும் கலைஞர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.
திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியலில் இதுவரை டப்பிங் கலைஞர்களுக்கு இடமில்லை. பின்னணி குரல் கலைஞர்களுக்கு இதுவரை தேசிய அங்கீகாரம் எதுவும் இல்லை. அடையாளம் காணப்படாமலேயே பல கலைஞர்கள் மறைந்து விட்டனர். அதனால் இனி வரும் காலங்களில் தேசிய விருது பட்டியலில் எங்களுக்கும் இடமளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இதுவரையில் சண்டை பயிற்சியாளர்களுக்கும் தேசிய விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தாண்டு அந்த துறைக்கும் தேசிய விருது வழங்கும் முறையைக் கொண்டு வந்து விட்டார்கள். அது போல் டப்பிங் கலைஞர்களுக்கும் இடமளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. டப்பிங் கலைஞர்களின் கோரிக்கைய ஏற்று அடுத்த ஆண்டு முதல் விருது வழங்க மத்திய அரசு முன்வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.