அசத்தும் கண்டுபிடிப்பு… 10 அடி தூரத்தில் இருந்தே மற்றவர்களது உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் ஹெல்மெட்!!!
- IndiaGlitz, [Tuesday,September 15 2020]
துபாய் நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தூரத்தில் இருந்து கொண்டே பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் நவீன ஹெல்மெட் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவ அதிகாரிகள் பல அடி தூரத்தில் இருந்து கொண்டே மிக எளிதாக பொது மக்களின் உடல் வெப்பநிலையை அறிந்து கொள்ள முடியும்.
KCN901 எனப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஹெல்மெட் நவீன தெர்மல் ஸ்கேனிங் வசதியுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மாட் ஹெல்மெட்டின் முன்பகுதியில் INFRARED எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் பொருத்தப் பட்டிருக்கிறதாம். இதனால் சாலையில் நடமாடும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை மிக எளிதாக கண்டுகொள்ள முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நுண்ணிய தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாகிறது எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
கொரோனா அச்சத்தால் மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதுபோன்ற நவீனக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு கொரோனா அறிகுறிகளுடன் பொது இடங்களில் நடமாடுபவர்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபர்களைக் கண்டால் ஹெல்மெட்டில் உள்ள அகச்சிவப்பு கதிர்கள் செயல்பட்டு அவர்களை காண்பித்து கொடுத்து விடுகிறது. இதன்மூலம் கொரோனா அறிகுறி கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முடியும் என சிலிகன் ஓயசிஸ் பகுதியின் பாதுகாப்பு ஆணையம் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறது.