இரட்டை உலகச் சாதனைகளைப் படைத்த இந்தியச் சிறுமி… குவியும் பாராட்டு!!!
- IndiaGlitz, [Tuesday,January 12 2021]
துபாய் வாழ் இந்திய சிறுமி ஒருவர் இரட்டை உலகச் சாதனைகளை படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். 14 வயது சுச்சேதா சதீஷ் எனும் சிறுமி இசை நிகழ்ச்சியில் பெரும்பாலான மொழிகளில் பாடியதற்காகவும் மிக நீண்ட நேரம் ஒரு குழந்தை இசைக் கச்சேரி நிகழ்த்திய பிரிவிலும் என இரட்டை சாதனைகளை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.
சமீபத்தில் துபாயைச் சேர்ந்த ஒரு அமைப்பு இந்தியாவில் உள்ள இளம் திறமையாளர்களை அடையாளம் காண்பதற்காக இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் தலைமையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த அமைப்பு நடத்திய தேர்வுகளில் இந்தியாவைச் சேர்ந்த சிறுமி இசைப் பிரிவில் வியக்க வைக்கும் சாதனையை படைத்து இருக்கிறார். இதனால் 100 குளோபல் சைல்டு ப்ராடிஜி விருதை வென்றுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த 8 ஆம் தேதி வெளியானது.
இந்தியன் துபாய் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் சுச்சேதா சதீஷ் தனது 12 ஆவது வயதில் துபாயில் உள்ள இந்திய தூதரக ஆடிட்டோரியத்தில் நடந்த கச்சேரியில் கலந்து கொண்டார். அதில் இவர் 6.15 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார். இவர் பாடிய “யா ஹப்பி” எனும் ஆல்பத்தை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இரட்டை சாதனைகளை படைத்து இருக்கும் சிறுமி சுச்சேதா சதீஷ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.