குடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Saturday,May 30 2020]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் மதுக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டாலும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்செயல்கள் மிகவும் குறைந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த இரண்டு மாதங்களில் எந்த ஒரு பெரிய குற்றச் செயல்கள் குறித்த செய்தியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் மதுக்கடைகள் திறந்த நிலையில் ஆங்காங்கே குற்றங்கள் பெருகி வருகிறது. இந்த நிலையில் குடிபோதையில் ஒருவர் மது பாட்டிலை தன்னுடைய உடலுக்குள் பின்பக்கமாக செலுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் மது குடித்து விட்டு அந்த மதுபாட்டிலை போதையில் தன்னுடைய பின் பக்கமாக சொருகி உள்ளார். அதன் பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு மீண்டும் பாட்டிலை வெளியே எடுக்க முயன்றபோது அவரால் முடியவில்லை. இது குறித்து அவர் தன்னுடைய வீட்டிலும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு வலி அதிகமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருடைய நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்., தன்னுடைய வாழ்நாளில் இப்படி ஒரு நோயாளியை பார்த்ததே இல்லை என்று அந்த மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறினார். பொதுவாக எந்த நோயாளியாக இருந்தாலும் அவர்களுக்கு முதலில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பின்னரே சிகிச்சையை ஆரம்பிப்போம் என்றும், ஆனால் இந்த நோயாளியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாகவும், மதுபாட்டில் உள்ளுக்குள் உடைந்து விட்டால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என்பதால் உடனடியாக சர்ஜரி செய்ய முடிவு செய்தோம் என்று கூறிய மருத்துவர் இரண்டு மணி நேரம் சர்ஜரி செய்து அந்த பாட்டிலை வெளியே எடுத்ததாகவும், தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும் கூறினார்.
மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மது பாட்டிலை தன்னுடைய உடலுக்குள் செலுத்திக் கொண்டே குடிகாரரால் நாகப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.