ஊரடங்கு நேரத்தில் அலறியடித்து ஒடிய திருப்பூர் இளைஞர்கள்: காரணம் என்ன?
- IndiaGlitz, [Wednesday,April 15 2020]
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வரும் மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் ஊரடங்கு உத்தரவை மதித்து, மத்திய அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் எந்த உத்தரவையும் மதிக்காமல் சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல் வெளியே திரிந்து வருகின்றனர். ஒரு சிலர் காலியான மைதானத்தில் மரத்தடியில் கேரம் போர்டு விளையாடுவது, சீட்டு விளையாடுவது போன்றவைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ட்ரோன் மூலம் வெளியே சுற்றுபவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் திருப்பூர் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் ’ஒரு மரத்தின் அடியில் சில இளைஞர்கள் கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்தனர். திடீரென்று ட்ரோன் வருவதை பார்த்தவுடன் அந்த இளைஞர்கள் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசையாக ஓடினர். குறிப்பாக ஒரு இளைஞர் ட்ரோன் கேமிராவில் தனது முகம் தெரியாமல் இருக்க கேரம் போர்டை தனது முகத்தை மறைத்துக் கொண்டு ஓடிய காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. இருப்பினும் அவரை விடாமல் துரத்தி அவரது முகத்தை பதிவு செய்ய ட்ரோன் முயற்சி செய்தது.
இந்த வீடியோ பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் இதுபோன்று சமூக விலகலை கடைப் பிடிக்காமல் இருப்பது பெரும் தவறு என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே போலீசார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மிக பயங்கரமானது என்பதை புரிந்து கொண்டு அனைவரும் வீட்டில் இருக்குமாறு போலீசார் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.