கொரோனா வறுமையால் பிச்சை எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்த நபர்!
- IndiaGlitz, [Tuesday,May 26 2020]
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு ஏற்பட்ட வறுமை காரணமாக பிச்சை எடுத்த இளம்பெண் ஒருவரை கருணை உள்ளம் கொண்ட நபர் ஒருவர் திருமணம் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தினமும் தனது பகுதியில் உள்ள தெருவோர மக்களுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். அவர் அவ்வாறு உணவு பொட்டலங்கள் கொடுக்க செல்லும்போது கூடவே தனது கார் டிரைவரையும் அழைத்துச் சென்றார். கார் டிரைவரும் தனது முதலாளிக்கு உதவியாக உணவு பொட்டலங்களை எடுத்து தெருவோர பிச்சைக்காரர்களுக்கு அளித்துள்ளார்
இந்த நிலையில் தினமும் ஒரு இளம்பெண் தனது தாயாரை அழைத்துக்கொண்டு உணவுப் பொட்டலங்கள் வாங்கி வருவதை டிரைவர் கவனித்துள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண்ணிடம் என்ன நடந்தது? ஏன் பிச்சை எடுக்கிறீர்கள்? என்று கேட்டபோது தனது தந்தை சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டதாகவும், தனது தாயார் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் தனது சகோதரரும் அவரது மனைவியும் தாயாரையும் தன்னையும் அடித்து விரட்டி அடித்து விட்டதாகவும், தானும் தன்னுடைய தாயாரும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதால் பிச்சை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த பெண் மீது இரக்கப்பட்ட அந்த டிரைவர், தனது முதலாளியிடம் அந்த பெண்ணின் நிலைமையை கூறி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். டிரைவரின் கருணை உள்ளத்தை கண்டு பெருமிதம் கொண்ட அந்த தொழிலதிபர் தனது தலைமையிலேயே இருவருக்கும் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
கொரோனா வறுமையால் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளம்பெண் ஒருவருக்கு டிரைவர் ஒருவர் வாழ்க்கை கொடுத்துள்ளது அந்த பகுதியில் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது