25 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மனித ஸ்பீட்-பிரேக் ஆக மாறிய டிரைவர்
- IndiaGlitz, [Friday,December 08 2017]
25 குழந்தைகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பற்றி சிறிதும் கவலைப்படாமல் மனித ஸ்பீட்-பிரேக் ஆக மாறிய டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் உள்ள ஷிவ் யாதவ் என்ற 30 வயது டிரைவர் ஒருவர் வழக்கமாக தனது வேனில் 25 பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றும், பின்னர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்லும் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று வேனை முதல் கியரில் நிறுத்திவிட்டு டிரைவர் ஷிவ் யாதவ் கீழே இறங்கினார். அந்த நேரத்தில் வேன் சாய்வான சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது வேனில் உள்ள ஒரு குழந்தை தெரியாமல் நியூட்ரல் கியருக்கு மாற்றிவிட்டார். உடனே சாய்வான சாலையில் நின்றிருந்த வேன் பின்னோக்கி நகர்ந்தது. இன்னும் சில அடி தூரம் சென்றால் வேன் ஒரு மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்துவிடும் ஆபத்தும் இருந்தது
இந்த நேரத்தில் சற்றும் யோசிக்காமல், தனது உயிரை பற்றிக்கூட கவலைப்படாமல் உடனடியாக டிரைவர் ஷிவ் யாதவ் சக்கரத்தை தடுக்கும் வகையில் படுத்து, மனித ஸ்பீட் பிரேக்காக மாறினார். இதனால் வேன் உடனே நின்றது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டாலும் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
தனது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் 25 பள்ளிக்குழந்தைகளை காப்பாற்றிய அந்த இளைஞருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.