'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் கதை சொந்த அனுபவமா? இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து ’த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தில் மோகன்லாலின் மகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கொலையை செய்து விட அந்த கொலையை மறைத்து தண்டனையிலிருந்து தப்புவது தான் முதல் பாகத்தில் கதையாக இருந்தது. ’த்ரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் இந்த கொலை குறித்து போலீசாருக்கு ஒரு துப்பு கிடைத்ததையடுத்து மோகன்லால் குடும்பத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்படுகிறது. அந்த சிக்கலில் இருந்து மோகன்லால் குடும்பம் தப்பியதா? என்பது தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை

ஒரு இரண்டாம் பாகம் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாவது பாடத்தையும் கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லால் குடும்பத்தின் புகைப்படத்தையும், ஜீத்து ஜோசப்பின் குடும்பப் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து ஒரு சில ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். ஜீத்து ஜோசப்பிற்கும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை இயக்குனரின் வாழ்க்கையில் நடந்ததா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ஜீத்து ஜோசப் கூறியபோது, ‘இந்த படத்தின் கதைக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க கற்பனைக்கதை என்றும் விளக்கமளித்துள்ளார்.