வெளிநாட்டில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ தங்கம்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

மியான்மர் நாட்டில் இருந்து சாலை வழியாக அதுவும் சரக்கு வாகனத்தில் வைத்து மேற்கு வங்காளத்திற்கு தங்கம் கடத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் புலனாய்வு சோதனை அதிகாரிகள் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அப்போது நடைபெற்ற சோதனையில் ஒரு சரக்கு வாகனத்தில் இருந்து 33 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதனால் வாகனத்தில் இருந்த 4 பேரை வருவாய் சோதனை இயக்குனரக அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் மேலும் இவர்கள் மியான்மரில் இருந்து சாலை வழியாக தங்கத்தை சரக்கு வாகனத்தில் கடத்தியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. அதில் 202 தங்கக்கட்டிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாக மாறியிருக்கிறது. இதற்கு காரணம் இந்தியாவில் வாங்கப்படும் தங்கத்திற்கு அதிகபடியான வரி செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த வரியின் அளவை குறைக்கும்போது தங்கம் கடத்தப்படுவது கட்டுப்படுத்த முடியும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமீபத்தில் இதே நிகழ்வை ஒட்டி இலங்கை அரசாங்கம் தங்கத்திற்கான வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதைப்போலவே இந்தியாவிலும் தங்கத்திற்கான வரியைக் குறைக்கும்போது தங்கத்தின் விலை குறைந்து வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.