வெறும் 35 டாலருக்கு வாங்கிய ஓவியத்தின் மதிப்பு 75 கோடியா? ஆச்சர்யமூட்டும் தகவல்!
- IndiaGlitz, [Saturday,February 19 2022]
கலைப் பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட நபர் ஒருவர், அமெரிக்காவின் சாதாரண ஒரு கடையில் இருந்து ஒரு ஓவியத்தைச் சேகரித்திருக்கிறார். அந்த ஓவியத்தின் மதிப்பு தற்போது 75 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில் அந்த மனிதர் தலைகால் புரியாமல் ஆனந்தத்தில் தத்தளிக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
கிளிஃபோர்ட் ஹோரர் என்பவருக்கு கலைப் பொருட்களின் மீது அலாதி பிரியம். அதைப் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து சேகரிக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2017 இல் அமெரிக்காவின் Massachusetts எனப்படும் ஒரு சாதாரண கடையில் இருந்து பிரபல ஜெர்மானிய சிந்தனையாளரான ஆல்பிரெக்ட் டூரர் என்பவர் வரைந்த ஒரு ஓவியத்தை 30 டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். இந்திய மதிப்பில் 2,000.
முதலில் சாதாரண கடையில் இருந்து ஓவியத்தை வாங்கியதால் அது உண்மையான ஓவியம்தானா? என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்துவந்துள்ளது. இதையடுத்து 3 ஆண்டுகளாக அதன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஒருவழியாக தான் வாங்கிய ஓவியம் பிரபல ஜெர்மனிய சிந்தனையாளர் ஆல்பிரெக்ட் ஹோரர் வரைந்த அசல் நகல்தான் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த ஓவியத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 10 மில்லியனைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் அது 75 கோடி. இதையடுத்து சந்தோஷத்தில் திக்கு முக்காடி போன கிளிஃபோர்ட் தனக்குச் சொந்தமான ஓவியத்தை தற்போது லண்டன் ஆர்ட் கேலரியும் பத்திரப்படுத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். கிளிஃபோர்ட்க்கு கிடைத்திருக்கும் இந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்த சிலர் இதைத்தான் அதிர்ஷ்டம் என்பார்களோ? எனப் புலம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.